பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதியுயர் பாதுகாப்புப் பகுதியில் உள்ள டென்மார்க் தூதரகத்திற்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் படுகாயமடைந்தனர்.
அயல்நாடுகளின் தூதரகங்கள் நிறைந்த பகுதியில் டென்மார்க் தூதரகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.
இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், முகமது நபி பற்றி டென்மார்க் பத்திரிகைகளில் வெளியான கார்ட்டூன்களால் ஆத்திரமடைந்த சிலர் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
இக்குண்டுவெடிப்பில் பலியானவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்றும், இதில் பலர் தூதரகங்களில் காவலாளிகளாகப் பணியாற்றியவர்கள் என்றும் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டுவெடிப்பினால் டென்மார்க் தூதரகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 30 கார்கள் முழுமையாக நொறுங்கிவிட்டன. பல்வேறு தனியார் கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. குண்டுவெடித்த இடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன.
பல்வேறு நாடுகளின் தூதர்களும் இப்பகுதியில்தான் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியத் தூதரின் வீடுகூட குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து குறுகிய தொலைவில்தான் உள்ளது.