நியூயார்க்: முஸ்லிம் சமுதாயத்தைக் கண்காணிப்பதற்காக மசூதிகள் கூர்ந்து கவனிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாற்றை அமெரிக்கப் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ. மறுத்துள்ளது.
தனிமனிதர்களின் சட்டபூர்வமான நடவடிக்கைகளைக் கண்காணிப்பது தங்கள் நோக்கமல்ல என்றும் அத்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து எஃப்.பி.ஐ. இணை இயக்குநர் ஜான் மில்லர் விடுத்துள்ள அறிக்கையில், "சட்டபூர்வமாக இயங்கும் முஸ்லிம் அமைப்புகள் எங்கிருந்தாலும், அவற்றைக் கண்காணிக்கவோ குறிவைக்கவோ மாட்டோம்" என்று கூறியுள்ளார்.
வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள மசூதிகளை எஃப்.பி.ஐ. கண்காணித்து வருவது முஸ்லிம்களின் உரிமைகளை மீறுவதாகும்; இவ்விவகாரத்தை அமெரிக்கக் காங்கிரசில் எழுப்ப வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத் தலைவர் ஒருவர் கூறியதாக சாண் டியாகோ யூனியன் டிரிப்யூன் இதழில் செய்தி வெளியானது.
இதுகுறித்து ஜான் மில்லர் கூறுகையில், வழிபாட்டுத் தலங்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கண்காணிப்பது தங்களின் நோக்கமல்ல என்றும், எஃப்.பி.ஐ.யின் தலைமை வழக்கறிஞர் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் தனிநபர் அல்லது குழுவின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்படவோ அல்லது புலனாய்வோ செய்யப்படும் என்றார்.