எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கவும், பயங்கரவாதம் ஒரு பொதுவான அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து போராடவும் பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் தடைபட்டிருந்த 4 ஆவது கட்ட அமைதிப் பேச்சை நிறைவு செய்யும் வகையில் இரு தரப்பு அயலுறவுச் செயலர்களும் பேசியதையடுத்து, இரு தரப்பு அயலுறவு அமைச்சர்களும் இன்று சந்தித்துப் பேசினர்.
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேசி ஆகியோருக்கு இடையில் நடந்த பேச்சில் காஷ்மீர், சியாச்சின், சர் கிரீக் விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. ஜம்மு- காஷ்மீர் தொடர்பான இரு தரப்பிற்கிடையில் நம்பிக்கையை வலுப்படுத்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும், இரு நாட்டுச் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள மாற்று நாட்டுக் கைதிகளின் நலன் தொடர்பாகவும், அவர்களை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு ஏதுவாகவும் உடன்பாடு ஒன்று கையெழுத்தானது.
இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் குரேசி, "பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அதை எதிர்த்து இணைந்து போராட நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.
இதன்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான இணைந்த கட்டமைப்பு (Joint Anti Terror Mechanism ) ஒன்று உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். இதன்மூலம் இரு தரப்பு நல்லுறவும் பாதிக்கப்படாமல் காக்கப்படும்" என்றார்.
ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகளைக் குறிப்பிட்ட அவர், அதற்குக் காரணமான பயங்கரவாதிகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பாகிஸ்தானும் கூட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது; முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ அதற்குத்தான் பலியானார் என்றும் தெரிவித்தார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு, ஊடுருவல் தொடர்பாக இரு தரப்பு நலன்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட குரேசி, பதற்றத்தைக் குறைப்பதற்காக போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "நல்லுறவுகளை முழுமையாக இயல்பாக்கும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானிடம் முழு ஒத்துழைப்பு இருப்பதை நான் கண்டுகொண்டேன்" என்றார்.
இரு நாட்டு அயலுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான அடுத்தகட்டப் பேச்சு வருகிற ஜூலை மாதம் துவங்கும் என்று கருதப்படுகிறது.