அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் மேலும் ஒரு மாகாணத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பாரக் ஒபாமா நெருங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவதில் கருப்பினத்தவரான பாரக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஒபாமா அதிக பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று முன்னணியில் உள்ளார்.
கடந்த வாரம் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஹிலாரி வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து ஹெண்டகி மற்றும் ஒரேகான் மாகாணங்களில் தேர்தல் நடந்தது.
இதன் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹெண்டகியில் ஹிலாரி 65 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஒபாமாவிற்கு 30 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம், ஹிலாரிக்கு 37 பிரதிநிதிகளின் ஆதரவும், ஒபாமாவிற்கு 14 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.
ஒரேகான் மாகாணத்தில் ஒபாமா 58 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஹிலாரிக்கு 42 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் ஒபாமாவிற்கு 21 பிரதிநிதிகளின் ஆதரவும், ஹிலாரிக்கு 14 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.
இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில் ஒபாமாவிற்கு 1949 பிரதிநிதிகளின் ஆதரவும், ஹிலாரிக்கு 1769 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. யார் 2026 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுகிறார்களோ அவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவர்.
தற்போது ஒபாமாவிற்கு 77 பிரதிநிதிகளின் ஆதரவும், ஹிலாரிக்கு 257 பிரதிநிதிகளின் ஆதரவும் தேவை. இன்னும் 3 மாகாணங்களில் மட்டுமே தேர்தல் நடக்க வேண்டியுள்ளது. இதில் ஒபாமா எளிதில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.