இந்தியாவுடனான அமைதி நடவடிக்கைகளில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்றும், காஷ்மீர் உள்ளிட்ட இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பிரச்சனைகள் பேச்சின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அந்நாட்டு அதிபர் முஷாரஃப் இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான 5ஆவது சுற்று அமைதிப் பேச்சுக்கள் இஸ்லாமாபாத்தில் நடந்து வருகின்றன. இருநாட்டு அயலுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுக்களைத் தொடர்ந்து அயலுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுக்கள் நடக்கவுள்ளன.
இதற்காக இஸ்லாமாபாத் சென்றுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பை அவரின் மாளிகையில் சந்தித்தார்.
இருதரப்பு உறவுகள், மண்டல பாதுகாப்புச் சூழல்கள், வணிகம், நம்பிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அப்போது இருவரும் விவாதித்துள்ளனர்.
அமைதிப் பேச்சுக்களில் பாகிஸ்தான் மிகுந்த ஈடுபாட்டுடனும் உறுதியுடனும் உள்ளதாகக் குறிப்பிட்ட முஷாரஃப், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும்போது அம்மாநில மக்களின் நலன்களும் விருப்பமும் நிராகரிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
இச்சந்திப்பு குறித்துத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள முஷாரஃப், அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் துவங்கியுள்ளதைத் தான் வரவேற்பதாகவும், இப்பேச்சின் இறுதியில் நல்லமுடிவுகளை எட்டமுடியும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான அமைதி நடவடிக்கைகளில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்றும், காஷ்மீர் உள்ளிட்ட இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பிரச்சனைகள் பேச்சின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் முஷாரஃப் கூறியுள்ளார்.
பிரணாப் முகர்ஜி கூறுகையில், அமைதிப் பேச்சில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், எல்லா நீண்டகாலப் பிரச்சனைகளுக்கும் நிலையான தீர்வு காண்பதன் மூலம் இருநாடுகளின் பொருளாதாரமும் வலுப்பட வாய்ப்பு ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது முஷாரஃபுடன் பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரோசியும், பிரணாப் முகர்ஜியுடன் இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனனும் இருந்தனர்.