தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் திடீர் மாரடைப்பினால் காலமானார்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், "இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய முதலாவது மரபுவழிப் படையணியான சார்லஸ் அன்ரனி படைப் பிரிவின் முதலாவத கட்டளைத் தளபதி ஆவார். 1993 வரையும், பிறகு 1995-1997 ஆம் ஆண்டுகளிலும் அவர் அப்பொறுப்பை வகித்தார்.
அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிரிகேடியர் பால்ராஜூக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் முதல் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.