இந்தியர்கள் 10 பேருடன் காணாமல் போன ஜோர்டானியன் சரக்குக் கப்பலை சோமாலியக் கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்று தங்கள் நாட்டுத் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருப்பது மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பைத் துறைமுகத்திற்கு இன்று கிடைத்த தகவல்களின்படி எம்.வி.விக்டோரியா என்ற அந்தச் சரக்குக் கப்பல் சோமாலியா தலைநகர் மொகதிசுவில் இருந்து 600 கிலோ மீட்டர் வடக்கில் கேராகேட் என்ற இடத்தில் உள்ளது. கடல் கொள்ளையர்களின் கோரிக்கை என்ன என்பது பற்றிய தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.
உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவிற்கு 4,200 டன் சர்க்கரையை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து இம்மாதத் துவக்கத்தில் புறப்பட்டுச் சென்ற அந்தக் கப்பல், கடந்த சனிக்கிழமை சோமாலியக் கடற்கரைக்கு அருகில் மொகதிசுவில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் கடத்திச் செல்லப்பட்டது என்று கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
கடத்தப்பட்ட கப்பலைப் பற்றிய தகவல்கள் விரைவாகச் சேகரிக்கப்பட்டு வருவதுடன், இந்தியக் கப்பற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கப்பலைக் கண்டறியும் முயற்சியில் கென்யாவைச் சேர்ந்த கிழக்கு ஆஃப்ரிக்க கடல்போக்குவரத்து தொழிலாளர் சங்கமும் ஈடுபட்டுள்ளது.
இந்தியக் கப்பற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ். டெல்லி, உத்தரவு கிடைத்தவுடன் புறப்படும்படி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று கப்பற்படை வட்டாரங்கள் பி.டி.ஐ. நிறுவனத்திடம் தெரிவித்தன.
மொத்தம் 21 பேருடன் கூடிய எம்.வி.விக்டோரியா கப்பலை 3 விசைப் படகுகளில் வந்த கடல் கொள்ளையர்கள் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களின் முனையில் கடத்தியுள்ளனர்.