சீனாவில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் பலியானவர்களில் அயல்நாட்டினர் யாரும் இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் கின் காங், "எங்களிடம் உள்ள தகவல்களின்படி, நிலநடுக்கத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் யாரும் அயல்நாட்டினர் இல்லை" என்றார்.
அயல்நாட்டவர்களின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு சீனா மிக முக்கியத்துவம் அளிக்கிறது என்ற கின் காங், "தொடர்புடைய அதிகாரிகளிடம் நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அயல்நாட்டினர் யாராவது உள்ளனரா என்று விசாரிக்குமாறு தூதரங்களைக் கேட்டுக்கொண்டு உள்ளோம்" என்றார்.
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு வசதிகள் புதுப்பிக்கப்பட்டால், இன்னும் நிறையத் தகவல்கள் தெரிய வரும்.
அப்படி யாராவது அயல்நாட்டினர், அயல்நாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு வசதிக்குறைவு இருந்தால், அவர்கள் உடனடியாக அயலுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம் என்றார் அவர்.