Publish Date: Mon, 12 May 2008 (20:44 IST)
Updated Date: Mon, 12 May 2008 (20:43 IST)
சீனாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் 900 பேர் உள்பட 5,000 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை 11.58 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
அம்மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இருந்து 57 மைல் தொலைவில் பூமிக்குள் 10 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலடுக்கத்தினால் உண்டான அதிர்வுகள், சீனத் தலைநகர் பீஜிங், ஷாங்காய் தாய்லாந்து தலைநகர் பாங்காங், வியட்நாமில் உள்ள ஹனாய் நகரங்களிலும் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வு கிழக்கு பீஜிங்கில் 3.9 ரிக்டராகப் பதிவானது. இதனால் பீதியடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்.
3,000 முதல் 5,000 பேர் வரை பலி!
இந்தக் கடும் நிலநடுக்கத்தினால் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள உயர்ந்த கட்டடங்களும் தரைமட்டமாகின. அவற்றின் இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பெய்ச்சுவான் கவுண்டி என்ற இடத்தில் மட்டும் இடிபாடுகளில் சிக்கி 3,000 முதல் 5,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், சுமார் 10,000 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் அரசு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
தூஜியான் ஜியான் பகுதியில் 2 பள்ளிகளின் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் பலியானதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
பள்ளிகளின் வகுப்பறைகளில் இருந்த சுமார் 900 குழந்தைகள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிக்கு ராணுவம் விரைந்தது!
இந்நிலநடுக்கத்தைப் பேரிடர் என்று விவரித்துள்ள சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிச்சுவான் மகாணத்திற்கு பிரதமர் வென் ஜியாபாவோ விரைந்துள்ளார். அவருடன் ராணுவத்தினரும் மீட்புப் படையினரும் பெருமளவில் விரைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த 1976 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி பீஜிங் அருகில் உள்ள டாங்சான் நகரத்தில் ஏற்பட்ட இதேபோன்ற ஒரு நிலநடுக்கத்தில் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
அதன்பிறகு இத்தகைய ஒரு கடுமையான நிலநடுக்கத்தை தற்போதுதான் சீனா சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.