சாதாரண மற்றும் அணு ஆயுதத்துடன் பறந்து சென்று தரை, கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ராட்(Raad) ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
அரபு மொழியில் மின்னல் எனப் பொருள் கொண்ட ராட் ஏவுகணை 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்தது.
இதுகுறித்துப் பாகிஸ்தான் ராணுவம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், " ஆயுத வடிவமைப்பைச் சரிபார்ப்பதற்காக நடத்தப்படும் சோதனைகளில் இதுவும் ஒரு பகுதி" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இச்சோதனை எங்கு நடத்தப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
3,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரை இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த நீண்டதூர ஏவுகணையான அக்னி-3 ஐ இந்தியா வெற்றிகரமாகச் சோதித்ததற்கு மறுநாள் பாகிஸ்தான் இந்தச் சோதனையைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாப்-8 (Hatf-VIII) என்றும் அழைக்கப்படும் ராட் ஏவுகணை வான் தளத்தில் இருந்து தரை மற்றும் கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதென்றும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் உலகில் மிகச்சில நாடுகளிடம் மட்டுமே உள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
ராட் ஏவுகணைச் சோதனை வெற்றிபெற்றது குறித்து அறிந்ததும், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப், பிரதமர் யூசுப் ராஷா கிலானி ஆகியோர் விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் பாராட்டினர்.
ராட் ஏவுகணை முதன்முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதிக்கப்பட்டது. அப்போது, அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் காரணமாகவும், அதன் வடிவமைப்பினாலும் ஏவுகணையின் திறன் குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் தனது கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் ஏவுகணையான ஷகீன்- 2 அல்லது ஹாப்- 6 ஐ வெற்றிகரமாகச் சோதித்தது குறிப்பிடத்தக்கது.