நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாவோயிஸ்ட் கட்சியை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து காத்மண்டுவில் நேபாள வர்த்தக சபை நிர்வாகிகளுடன் பேசிய அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் வில்லியம்ஸ் அல் மார்ட்டின், "நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் கட்சியை வாஷிங்டனின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பான தயாரிப்புகள் நடந்து வருகின்றன" என்றார்.
அமெரிக்க அரசின் இணைய தளத்தில், பயணிக்கத் தகுதியில்லாத இடங்கள் பட்டியலில் இருந்தும் நேபாளத்தின் பெயர் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் தீர்ப்பிற்கு அமெரிக்க அரசு மதிப்பளிக்கும் என்ற வில்லியம்ஸ் அல் மார்ட்டின், மாவோயிஸ்டுகள் தங்கள் பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்ததாக நேபாள வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேபாளத்திற்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல், கடந்த மே 1ஆம் தேதி மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தாவை அவரின் இல்லத்தில் சந்தித்து அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.