வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 120 டாலர்களை கடந்து சென்றதற்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான தேவைகளே காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காட் ஸ்டான்ஸெல் இது குறித்து கூறுகையில், "இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளின் கச்சா எண்ணெய்த் தேவைகள் அதிகரித்துள்ளதால் கச்சா விலை அதிகரித்துள்ளது" என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிசக்தி விவகாரத்தில் அமெரிக்கா பிற நாடுகளை சார்ந்திருக்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கவில்லை, இதனால் உள் நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருக்குவதில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்டான்செல்.
உணவுப் பொருட்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளுக்கும், விலை உயர்விற்கும் இந்திய மத்திய தர வர்கத்தினரின் அதிகரித்துள்ள உணவுப்பழக்க வழக்கமே காரணம் என்று ஜார்ஜ் புஷ் கூறியதையடுத்து தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்விற்கும் இந்தியாவை குறை கூறியுள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத் தக்கது.