கடலுக்கடியில் அணு நீர்மூழ்கித் தளம் ஒன்றை சீனா ரகசியமாக அமைத்து வருவதாகவும், இதனால் ஆசிய நாடுகளுக்கு ஆபத்து உள்ளதாகவும் பிரிட்டன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
செயற்கைக்கோள் புகைப்படங்களை மேற்கோள் காட்டி டெய்லி டெலிகிராஃப் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், நூற்றுக்கணக்கான அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களை நிறுத்துவதற்கு ஏற்றவாறு சீனா ரகசியத் தளம் அமைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''அதில் ஒரு புகைப்படத்தில், சீனா அண்மையில் தயாரித்த 094 அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல், அண்டை நாடுகளின் எல்லையில் இருந்து சில நூறு மைலக்ள் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
மற்ற புகைப்படங்களில், ஹைனான் தீவின் தெற்கு முனையில் உள்ள சான்யா தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாதாள சுரங்கங்களின் வடிவங்கள், அங்கு நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பல்கள் உள்ளிட்டவை தெரிகின்றன'' என்றும் அச்செய்தி கூறுகிறது.
இந்தப் புகைப்படங்கள் டிஜிட்டல் குலோப் என்ற வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனத்தில் இருந்து ஜேன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற புலனாய்வு நிறுவனம் மூலமாகப் பெறப்பட்டுள்ளன.