கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் சீன அரசிற்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ள 30 திபெத்தியர்கள் மீது சீன அரசு நடத்திவரும் விசாரணை வெளிப்படையாகவும் பொதுப்படையாகவும் இல்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாற்றியுள்ளது.
திபெத்தியர்கள் மீதான விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது என்று சீன அரசின் செய்தி நிறுவனம் கூறினாலும், உண்மையான விசாரணை ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாகவே அறிவிக்கப்படாத தேதிகளில் மறைமுகமாக முடிந்துவிட்டது என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் ஆசியப் பிரிவு இயக்குநர் சோபி ரிச்சர்ட்சன் கூறுகையில், " குற்றம்சாற்றப்பட்டுள்ள திபெத்தியர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும், நிரபராதிகளாக இருந்தாலும் அவர்கள் வெளிப்படையான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்" என்றார்.
"மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் ஆதாரங்களை மறைக்க முயல்வதால் திபெத்தியர்களின் வழக்கறிஞர்களின் முயற்சிகள் பலனற்றுப் போகின்றன" என்றார் அவர்.