ஈரான் நாட்டு அதிபர் மஹ்மூத் அஹ்மதினெஜாத் இன்று புது டெல்லி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் ஈரான் அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.
ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா முத்தரப்பு எரிவாயுக் குழாய் திட்டம், ஈரான் - இந்தியா திரவ இயற்கை எரிவாயுத் திட்டம் ஆகியவற்றை அவர் இந்திய அரசுடன் கலந்தாலோசிக்கவுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ள ஈரான் அதிபர் சர்ச்சைக்குரிய ஈரான் அணு ஆயுத விவகாரத்தையும் விவாதிக்கலாம் என்று தெரிகிறது. பிறகு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும் சந்திக்கிறார் அஹ்மதினெஜாத்.
2003ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த ஈரான் அதிபர் மொஹமட் கடாமியுடன் கையெழுத்திடப்பட்ட 22 பில்லியன் டாலர்கள் திரவ இயற்கை எரிவாய்த் திட்டமும் தற்போது விவாதத்திற்கு எடுத்துவரப்படும் என்று தெரிகிறது.
முத்தரப்பு எரிவாயுக் குழாய் திட்டம், இருதரப்பு திரவ எரிவாயுத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் செலவினங்கள் காரணத்தால் முடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.