நியூயார்க்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஆப்கானில் போர் நடத்தும் முறையை ஆப்கான் அதிபர் கர்சாய் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கொள்கை தீர்மானங்களில் தனது அரசிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தாலிபான் தீவிரவாதிகள் என்றும் தாலிபானுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றும், சந்தேக அடிப்படையில் அமெரிக்க படையினர் செய்யும் கைதுகளை நிறுத்தவேண்டும், இந்த கைதுகளும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் நடத்தப்படும் விதமும் தாலிபான் அமைப்பினர் ஆயுதங்களைத் துறக்கும் நடவடிக்கையைத் தடுக்கிறது" என்று கூறியுள்ளார்.
தாலிபான், அல்-கய்டா பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று கூறிய கர்ஸாய், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆப்கான் கிராமங்களில் நடத்த முடியாது என்று கூறினார்.
அமெரிக்க போர்ப்படையினர் ஆப்கானிலிருந்து தாலிபான்களை விரட்டுகின்றனர். அவர்கள் நேராக பாகிஸ்தான் சென்று அங்கு மீண்டும் குழுவாக ஒன்று சேர்ந்து ஆயுதங்களை எடுக்கின்றனர் என்று அவர் அந்த பேட்டியில் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.