நேபாளத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 601 இடங்களில் மாவோயிஸ்டுகள் 220 இடங்களைக் கைப்பற்றினர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 601 இடங்களில் 575 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. இதில் 240 இடங்களுக்கு நேரடியாகவும், 335 இடங்களுக்கு மறைமுகமாகவும் வாக்குப்பதிவு நடந்தது. மீதுள்ள 26 இடங்களை பிரதமர் நியமிக்கவுள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்த வாக்கு எண்ணிக்கை, அரசியல் பங்கீடுகளுக்குப் பிறகு இன்று முழுவிவரங்களும் வெளியானது.
இதன்படி நேபாள கம்யூனிஸ்ட்- மாவோயிஸ்ட் கட்சி 220 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் நேபாள காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேரடி வாக்குப்பதிவு முறையில் மாவோயிஸ்டுகள் 100 இடங்களிலும், நேபாள காங்கிரஸ் 73 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மறைமுக வாக்குப்பதிவு முறையில் மாவோயிஸ்டுகள் 120 இடங்களிலும் நேபாள காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.