மரண தண்டனையைக் கைவிடுவது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று அந்நாட்டு செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது.
சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் புள்ளி விவரங்களின்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை அளவில் பாகிஸ்தான் 2- ஆம் இடத்தில் உள்ளது. சுமார் 7,000 த்திற்கும் அதிகமான மரண தண்டனைக் கைதிகள் அங்குள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் 134 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள புதிய கூட்டணி அரசு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிசீலித்து வருகிறது.
பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கிற்கு கருணை வழங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.