குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கிற்கு கருணை வழங்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கை தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அயலுறவு அலுவலகப் பேச்சாளர் முகமது சாதிக்கிடம் கேட்டதற்கு, "சரப்ஜித் சிங் விவகாரம் பாகிஸ்தான் அரசின் தீவிரப் பரிசீலனையில் உள்ளது. இந்திய அரசின் வேண்டுகோள் குறித்து உரிய சமயத்தில் முடிவெடுக்கப்படும்" என்றார்.
சரப்ஜித் சிங் தொடர்பான கருணை மனு எதுவும் நிலுவையில் இல்லை என்று பாகிஸ்தான் அதிபர் அலுவலகம் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில் முகமது சாதிக்கின் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக, பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் பேச்சாளர் ரஷீத் குரோசி கூறுகையில், "சில காலங்களுக்கு முன்பு அதிபரிடம் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் வழங்கிய கருணை மனு, பரிசீலனைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகம்தான் அதைப் பரிசீலித்துவிட்டு அதன் மீதான பரிந்துரையை பிரதமரின் செயற்பிரிவுக்கு அனுப்ப வேண்டும். பிரதமர் எடுக்கும் முடிவின் மீதுதான் அதிபர் முடிவெடுக்க முடியும்" என்றார்.
சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீட் கார், மகள்கள் ஸ்வந்தீப், பூணம், சகோதரி தல்பீர் கார், அவரது கணவர் பல்தேவ் சிங் ஆகியோர் நேற்று சரப்ஜித் சிங்கைச் சிறையில் சந்திப்பதற்காக இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக நேற்று பாகிஸ்தான் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.