இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக ஆஃப்கானிஸ்தான் கோதுமை இறக்குமதி செய்ய பாக். பிரதமர் யூசுப் ரஜா கிலானி அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக ஆஃப்கானிஸ்தானத்திற்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலை வழியாக போக்குவரத்து நடைபெற்றால், விமான போக்குவரத்து செலவை விட, சரக்கு போக்குவரத்து செலவு கணிசமாகக் குறையும்.
இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து கோதுமையை பாகிஸ்தான் வழியாக இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆஃப்கன் கோரிக்கை விடுத்து இருந்தது.
தற்போது இதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளதாக டெய்லி டைம்ஸ் தினசரி தெரிவித்துள்ளது.
இந்த தகவலை நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் விவசாய அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்தார்.
அவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, பிரதமர் யூசுப் ரஜா கிலானி இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் வழியாக கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள ஆஃப்கானிஸ்தானத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து கோதுமை ஆஃப்கானிஸ்தானத்திற்கு கடத்தப்படுவதை தடுக்க அரசு கண்காணிப்பு தீவிரப்படுத்தும். ஆஃப்கனுக்கு தேவையான கோதுமையை வழங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால் ஆஃப்கன் கோதுமை கடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று நடக்கும் மாநிலங்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு கோதுமை கடத்துவதை பற்றி விவாதிக்கப்படும். இதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யப்படும் என்று சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்ததாக டெய்லி டைம்ஸ் கூறியுள்ளது.