இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு 123 ஒப்பந்தம் சார்ந்ததே தவிர ஹைட் சட்டம் சார்ந்தது அல்ல என்று அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அயலுறவுத் துணை அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
"இந்தியாவிடன் அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மேற்கொள்வதைச் சாத்தியமாக்குவது, அதற்கான சட்ட இடையூறுகளை நீக்குவது ஹைட் சட்டம். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்பாடு 123 ஒப்பந்தம்.
ஹைட் சட்டத்திற்கும் 123 ஒப்பந்தத்திற்கும் இடையில் எந்த ஒரு தொடர்பும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை ஏற்படுத்துவதுதான் ஹைட் சட்டத்தின் முக்கியச் செயல்பாடாகும். இச்சட்டம் இல்லை என்றால் இந்தியாவுடன் எந்தவொரு உடன்பாட்டையும் அமெரிக்காவினால் மேற்கொள்ள முடியாது.
மேலும், இந்தியாவுடன் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திடுவதன் மூலம் 123 ஒப்பந்தம் பூர்த்தி செய்யப்படுவதை ஹைட் சட்டம் சாத்தியமாக்குகிறது. ஒப்பந்தம் ஒருமுறை பூர்த்தியாகி முழுமையாக அமலுக்கு வந்தவுடன் இந்தியாவையும் அமெரிக்காவையும் பிணைக்கிறது" என்றார் பெளச்சர்.