ஆஃப்கானிஸ்தானில் காவல்துறையினரை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 காவல் அதிகாரிகள் பலியானதுடன் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
ஆஃப்கனின் வடக்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் காவல்துறை அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 2 காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன், 3 பேர் படுகாயமடைந்தனர் என்று காவல்துறை தலைவர் கைருதீன் செளஜா தெரிவித்தார்.
வெடிகுண்டுகளுடன் ஒருவன் தங்களின் அணிவகுப்பை நெருங்கியதாகவும், அவனைக் காவலர்கள் தடுக்க முயன்றபோது அவன் தன்னிடமிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் அவர் கூறினார்.
கிழக்கு குனார் மாகாணத்தில் காவல்துறை சோதனைச் சாவடி ஒன்றின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 5 காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் 7 பேர் படுகாயமடைந்தனர் என்று அம்மாகாண காவல்துறை தலைவர் அப்துல் ஜலால் ஜலால் தெரிவித்தார்.
இதேபோல வடமேற்கு பத்கிஸ் மாகாணத்தில் காவல்துறை அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 3 காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அம்மாகாண காவல்துறை தலைவர் கலில் அந்தராபி தெரிவித்தார்.
ஆஃப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு முழுவதும் நடந்த வன்முறைச் சம்பவங்களிலும் தாக்குதல்களிலும் 8,000 பொதுமக்களும் 9,00 காவலர்களும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.