Publish Date: Wed, 23 Apr 2008 (15:52 IST)
Updated Date: Wed, 23 Apr 2008 (15:51 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் படையினர் 38 பேர் கொல்லப்பட்டதுடன், 84 பேர் படுகாயமடைந்தனர்.
யாழ்ப்பாணத்தின் வடக்குப் போர்முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்காப் படையினர் இன்று அதிகாலை 2.30 மணிக்கு மிகப்பெரிய தாக்குதலைத் துவங்கியுள்ளனர்.
இயந்திரத் துப்பாக்கிகள், ஆர்ட்டிலெறி பீரங்கிகள், மோர்ட்டார்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடம் சிறிலங்கப் படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
படையினர் இந்த முன்நகர்வு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணி வரை இந்த முறியடிப்புத் தாக்குதல் நீடித்துள்ளது.
சுமார் 10 மணி நேரம் நீடித்துள்ள இந்தக் கடுமையான மோதலில் சிறிலங்கப் படையினருக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டதாக புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலில் சிறிலங்கப் படையினர் 38 பேர் கொல்லப்பட்டதாகவும், 84 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.