நேபாளத்தில் மன்னராட்சியை முழுவதுமாக ஒழித்து குடியரசு ஆட்சி முறையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் அண்மையில் நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சியினர் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளதால் அக்கட்சியின் தலைவர் புஷ்ப குமார் தலாஸ் என்ற பிரசந்தா தலைமையில் ஆட்சி அமையும் என்று கருதப்படுகிறது.
இதுபற்றி முடிவு செய்வதற்காக தலைநகர் காத்மாண்டுவில் நேபாள கம்யூனிஸ்ட்- மாவோயிஸ்ட் கட்சியின் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் சி.பி. கஜூரெல், நேபாளத்தில் மன்னராட்சியை முழுவதுமாக ஒழித்துவிட்டு குடியரசு ஆட்சி முறையை அமல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதுபற்றி எல்லாக் கட்சியினர் இடையில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கப்படும் என்றார்.
"நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் கட்சிதான் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதனால் எங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும்" என்றார் அவர்.
நேபாள அரசியல் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 601 இடங்களில் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் கட்சி 222 இடங்களில் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக நேபாள காங்கிரஸ் கட்சி 111 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவதாக நேபாள கம்யூனிஸ்ட் - ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 104 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
அதாவது மாவோயிஸ்டுகள் 30 விழுக்காடு இடங்களிலும், நேபாள காங்கிரஸ் 21 விழுக்காடு இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் - ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 20 விழுக்காடு இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.