திபெத்தியர்களுடன் பேச்சு நடத்துமாறு சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் திபெத் விவகாரத்தைத் தீர்க்க அமெரிக்கா உதவ வேண்டும் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் திபெத்திற்கான சிறப்புத் தூதர் பெளலா டாப்ரியான்ஸ்கியை மிச்சிகனில் சந்தித்த தலாய் லாமா, திபெத் விவகாரம் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன் "தற்போதைய சூழலில் எங்களுக்கு உங்கள் உதவி தேவை" என்று வேண்டுகோள் விடுத்தார்.
தலாய் லாமாவுடனான சந்திப்பு திபெத் விவகாரம் பற்றி உரியகாலத்தில் விவாதிப்பதற்கு உதவியாக இருந்தது என்றார் டாப்ரியான்ஸ்கி.
"திபெத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளதுடன், அங்கு நிலைமை சீரடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது" என்ற அவர், "திபெத்தியர்களுடன் பேச்சு நடத்துவதற்கு சீனத் தலைவர்கள் முன்வர வேண்டும் என்ற வலியுறுத்தலுக்கு புஷ் அரசு எப்போதும் ஆதரவளிக்கும்" என்றார்.