ஆயுதங்களைத் துறந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி நேபாள தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள மாவோயிஸ்ட்கள் தங்கள் பட்டியலில் தீவிரவாதிகள் என்ற தகுதியிலேயே நீடிப்பார்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், அமெரிக்க அதிகாரிகளுடன் மாவோயிஸ்ட் தலைவர்கள் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க அரசின் உதவிச் செய்தி தொடர்பாளர் டாம் கேஸி கூறுகையில், இது ஒரு முக்கியமான கேள்வியென்றும், வன்முறையையும் தீவிரவாதத்தையும் விடுத்து அரசியல் நடைமுறைகளுக்கு மாவோயிஸ்ட்கள் திரும்பியுள்ளனர் என்பது உண்மைதான். இதனால் அந்த அமைப்பைப் பற்றிய மாற்றுப்பார்வைக்கு வாய்ப்பு கூடியுள்ளது என்று கூறியுள்ளார்.
எனினும் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால் நேபாளத்தைப் பொறுத்தவரை இந்த சட்டத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. மறு பரிசீலனை செய்யப்படும் என்பது உறுதி. ஆனால் இப்போதைக்கு தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து அந்த அமைப்பை நீக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.