ராணுவக் கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் ஜம்மு- காஷ்மீரில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட இந்தியாவிற்கு உதவத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து தலைநகர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி டென்னிஸ் சி பிளேர், மனிதாபிமான உதவிகள், பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகள், எதிர்த் தாக்குதல், அமைதி நடவடிக்கைகள், கடல் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுவான நடவடிக்கைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
"இந்தியாவிற்கு ஜம்மு- காஷ்மீர், அமெரிக்காவிற்கு ஆஃப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் தங்களுக்குத் தேவையான பயிற்சி மையங்களை அமைத்துள்ளனர்.
அவர்களுக்கு எதிராக வலிமையுடன் போராட இந்தியாவும் அமெரிக்காவும் தங்களின் அனுபவங்களையும், திறனையும் பகிர்ந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்" என்றார் அவர்.