மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த வெவ்வேறு சோதனைகளில் போதைப் பொருளைக் கடத்திய இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2,80,000 மலேசியன் ரிங்கிட் மதிப்புள்ள 20 கிலோ கேட்டாமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு மும்பை விமானத்தில் வந்த பயணி ஒருவர் தன்னுடைய உடமைகளைக் கையாள்வதில் சந்தேகப்படும் வகையில் நடந்துகொண்டதை கவனித்த மலேசிய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள், அந்தப் பயணியைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவரிடம் இருந்த 6 உணவுப் பொட்டலங்களில் 10 போதைப் பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பயணியைக் கைது செய்தனர்.
இதேபோலக் கடந்த 7ஆம் தேதி காலை 8.10 மணிக்கு மும்பையில் இருந்து வந்த வர்த்தகர் ஒருவரின் உடமைகளில் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. உணவுப் பொருட்கள் பெயரில் அவர் போதைப் பொருளைக் கடத்தியிருந்தார்.
இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட விவரம் இந்தித் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் மலேசியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.