Publish Date: Thu, 17 Apr 2008 (15:23 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார்.
ஃபீனிக்ஸ் என்ற புற நகர்ப் பகுதியில் தனது வீட்டில் தனியாக இருந்த நாராயணசாமி நாயக்கரை, வீட்டிற்குள் நுழைந்த திருடன் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து விட்டு பிணத்தை கழிவறையில் வைத்து பூட்டிச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அலுவலகப் பணி முடிந்து மாலை வீடு திரும்பிய அவரது மகள் ராணி பெருமாள் கழிவறையில் தந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த மாதத் துவக்கத்தில் இதே பகுதியில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்த ஷெரிதா தேவிப் பிரசாத் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இது நடந்து சில தினங்களில் கெல்வின் கிளாட் நாயுடு என்ற இந்தியரும் இதே பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தற்போது நாராயணசாமி நாயக்கரின் கொலையுடன் குறுகிய கால இடைவெளியில் 3ஆவது இந்தியர் கொல்லப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.