லண்டன்: லீசெஸ்டர் நகரில் மகாத்மா காந்தி சிலையை நிறுவ லீசெஸ்டர் நகர ஆட்சி மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மாதக் கணக்காக நடந்து வந்த விவாதங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
லீசெஸ்டர் நகர ஆட்சி மன்றத் திட்டக்குழுவினர் நேற்று மாலை கூடி இந்த விவகாரத்தின் அனைத்துக் கூறுகளையும் அலசி ஆராய்ந்தனர் அதன் பிறகு காந்தி சிலையை நிர்மாணிக்க ஒப்புதல் வழங்கினர்.
இந்தக் கூட்டத்தில் காந்தி சிலையை நிர்மாணிப்பதற்கான தகுதி அடிப்படைகள் பற்றி விவாதிக்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அனுமதி வழங்கிய 3 ஆண்டுகளுக்குள் காந்தி சிலை நிறுவப்பட்டாகவேண்டும் என்பது விதி என்று அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
குஜராத் மக்கள் அதிகம் புழங்கும் பெல்கிரேவ் சாலையில் 3.8 மீ. உயர காந்தி சிலை அமைக்கப்படவுள்ளது.