பீஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வந்துகொண்டுள்ள நிலையில், அமெரிக்கத் தடகள விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அவ்விழாவில் பங்கேற்பேன் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், திபெத்தில் சீனா மேற்கொண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற தனது வலியுறுத்தல் தொடரும் என்றும் அவர் கூறினார்.
திபெத்தில் சீனப் படைகள் மேற்கொண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளன் உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ஒலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாஷிங்டனில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிபர் ஜார்ஜ் புஷ்சிடம், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அமெரிக்க தடகள விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க இது ஒரு வாய்ப்பு என்று கருதுகிறேன்" என்றார்.