மிசிசிபி நிறுவனத்தில் பணியாற்றிவரும் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சனையை அமெரிக்க அரசு தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இது வேலை தருபவருக்கும் வேலை செய்பவருக்கும் இடையிலான சட்ட விவகாரம் என்பதால்தான் உடனடியாகத் தலையிட முடியவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அரசின் பேச்சாளர் சீன் மெக்கார்மக், "இந்த விவகாரத்தை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். குறிப்பிட்ட விசா வழக்குகளிலும், வேலை தருபவருக்கும் வேலை செய்பவருக்கும் இடையிலான சிக்கல்களிலும் அரசு நேரடியாகத் தலையிட முடியாது" என்றார்.
"இருந்தாலும், இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
20,000 அமெரிக்க டாலர் சம்பள அடிப்படையில் 10 மாதப் பணி விசா மூலம் மிசிசிபியில் இயங்கும் சிக்னல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முறைகேடாக அழைத்து வரப்பட்டுள்ள இந்தியத் தொழிலாளர்கள் தங்களை ஏமாற்றியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.