பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் சீன அரசிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பேச்சாளர் மேரி ஒகாபே, "ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் பான் கி மூன் கலந்து கொள்ளாததற்கு திபெத் விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் காரணமல்ல.
அயல்நாட்டுச் சுற்றுப்பயணம், தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் ஆகியவைதான் இச்சிக்கலுக்குக் காரணம். இதுகுறித்துச் சீன அரசிடம் பல மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு விட்டது" என்றார்.
இதற்கிடையில், பான் கி மூனின் இந்த முடிவில் சீன அரசு தலையிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, திபெத் மீதான சீன அடக்குமுறையைக் கண்டித்து சர்வதேசத் தலைவர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளன், ஜெர்மன் பிரதமர் ஏன்ஜெலா மெர்க்கெல் ஆகியோர் ஒலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்கப் போவதில்லை. பிரெஞ்ச் அதிபர் நிகோலஸ் சர்கோசியும் இதுகுறித்து ஆலோசிப்பதாக அறிவித்துள்ளார்.
இதேபோல அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் ஒலிம்பிக் துவக்க விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.