தமிழர் இனம் முழுவதுமாக அழிந்துவிடக் கூடிய அபாயத்தைத் தடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நார்வே அமைதிக் குழு, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கரின் வாழும் கலை அமைப்பு ஆகியவற்றின் சார்பில் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் 'தெற்காசிய மோதல்களும், அமைதியும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய வைகோ, "இலங்கையில் தற்போது மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. ஒரு பழமையான இனம் முற்றிலுமாக அழிந்துவிடப் போகிறது. இதைத் தடுக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு சிங்கள அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.
இலங்கையில் தமிழர்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாகிவரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய வைகோ, இலங்கையில் உள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கக் குழு தனது நடவடிக்கைகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்று கூறிய வைகோ, தமிழர் வாழும் பகுதிகளைத் தனி நாடாகவும் அவர்கள் வழிவழியாக வாழ்ந்து வரும் பகுதிகளை அவர்களின் பாரம்பரியப் பகுதிகளாக அங்கீகரிக்கும் வரை எந்தப் பேச்சும் தீர்வைத் தராது என்றார்.
"இப்பிரச்சனைக்கு ஆயுதப்போர் மூலம் தீர்வுகாண முற்பட்டால், உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் அகதிகளாகி விடுவார்கள்" என்றார் வைகோ.