ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை ஊக்குவிக்கும் அமெரிக்க நாடளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்கைக் கண்டித்துள்ள சீனா, "இது முற்றிலும் மனசாட்சியும் நியாமும் அற்றது" என்று கூறியுள்ளது.
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை சீனா அரசியலாக்குகிறது என்றும் சான் பிரான்சிஸ்கோவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி கூறியதையடுத்து சீனாவின் இந்தக் கண்டனம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் ஜியாங் யு கூறுகையில், "ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை யார் அரசியலாக்குகிறார்கள் என்றும், சான் பிரான்சிஸ்கோவில் மீண்டும் மீண்டும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு இடையூறு செய்பவர்கள் யார் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்றார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஒருசில உறுப்பினர்களே ஆவர். விளையாட்டை அரசியலாக்கக் கூடாது என்ற அடிப்படையில் இது முற்றிலும் மனசாட்சியும் நியாமும் அற்றது என்றார் ஜியாங் யு.
மேலும், சான் பிரான்சிஸ்கோவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை தான் ஊக்குவிப்பதாக நான்சி பெலோசி தனது அலுவலகத்தில் இருந்து விடுத்த அறிக்கையை ஜியாங் சுட்டிக்காட்டினார்.
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தின் வழித்தடம் பற்றிய அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை விரும்புபவர்கள் திபெத்தில் சீனப் படைகளின் அடக்குமுறையை கண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.