திபெத்தில் அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருபவர்களின் மீது அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைதியாகப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள திபெத்தியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், திபெத்தில் சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினரையும் பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி அறிமுகம் செய்தபோது அதற்கு ஆதரவாக 413 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் கிடைத்தது.
"தங்களின் மத அடையாளங்களையும், பண்பாடு மற்றும் மொழியையும் பாதுகாக்கும் திபெத்தியர்களின் திறனைக் கடுமையாக பாதிப்பதனால்தான் சீனக் கொள்கைகளுக்கும் சட்டங்களுக்கும் எதராகத் திபெத்தியர்கள் போராடத் தூண்டப்பட்டுள்ளனர்" என்ற பெலோசி, "திபெத் வழியாக ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்துவது மிகவும் அவமானகரமானது... இதை உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது" என்றார்.