அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் பணியாற்றும் இந்தியத் துறைமுகத் தொழிலாளர்கள் எச்2பி விசா என்ற பெயரில் அரங்கேற்றப்படும் நவீனக் கொத்தடிமை முறையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்துத் தங்கள் தலைவிதியை மாற்றியமைக்க இந்தியா தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் உள்ள சிக்னல் இன்டர்நேஷனல் என்ற கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் எச்2பி விசாவின் அடிப்படையில் அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர்.
தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணியும் தங்குமிடமும் தருவதாக உறுதியளித்த சிக்னல் இன்டர்நேஷனல் நிறுவனம், பின்னர் அவர்களைக் கொத்தடிமை போல நடத்தத் துவங்கியது. இதற்கு அடிப்படையாக எச்2பி விசாவின் விதிமுறைகளைக் காட்டியது.
இந்நிலையில் இதை எதிர்த்து இந்தியத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சேகத் சோனி தலைமையிலான இந்தியத் தொழிலாளர்கள் இன்று நியூயார்க்கில் ஐ.நா. வின் மனித உரிமைகளுக்கான தூதர் கிரேக் ஜி மொகிபரைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, நிரந்த வேலை வழங்கப்படும் என்ற பொய்யான உறுதிமொழியின் பேரில் எச்2பி விருந்தினர் விசாவின் அடிப்படையில் தாங்கள் அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் மனிதாபிமானமற்ற முறையில் தாங்கள் நடத்தப்படுவதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாற்றினர்.
இந்த விடயத்தில் சர்வதேச விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட கிரேக், வேறு எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை.
இதற்கிடையில், இந்தியத் தொழிலாளர்களின் குற்றச்சாற்றை சிக்னல் இன்டர்நேஷனல் நிறுவனம் மறுத்துள்ளது. குற்றச்சாற்றுக்கள் அடிப்படை ஆதாரமற்ற என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.