இந்தியாவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த ஆஃப்கானிஸ்தான் அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
இதன் ஒருபகுதியாகத் தங்கள் நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியாவின் பயிற்சி நிலையங்களுக்கு பயிற்சிக்காக அனுப்புவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
டெல்லியில் இன்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியைச் சந்தித்து 45 நிமிடங்கள் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆஃப்கன் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் ரஹீம் வார்டாக், சோவியத் யூனியன் காலத்து ஆயுத ஹெலிகாப்டர்கள், நடுத்தர ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை இயக்குவது குறித்துத் தங்கள் நாட்டுப் படைகளுக்குப் பயிற்சியளிக்க இந்தியா உதவ வேண்டும் என்றார்.
ஆஃப்கானிஸ்தானில் இருந்து 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவுடன் இந்தியா வந்துள்ள வார்டாக், இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஃபாலி ஹெச் மேஜரையும் சந்தித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வரும் முதல் ஆஃப்கன் பாதுகாப்பு அமைச்சர் வார்டாக் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத் தளவாடங்கள் பயிற்சியுடன், மருத்துவ உபகரணங்களைக் கையாளும் பயிற்சியையும் அவர் வேண்டியுள்ளார்.