உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரையும் விடுவிக்காவிட்டால் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம் என்று மலேசிய இந்திய வம்சாவழியினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் 8 ஆம் தேதி நடந்த மலேசியத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் உறுப்பினர் மாணிக்கவாசகம் கூறுகையில், "நான் அரசை எச்சரிக்கிறேன். நெருப்புடன் விளையாடாதீர்கள். நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கப் போகிறோம்" என்றார்.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்குச் சம உரிமை கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் ஹின்ட்ராஃப் அமைப்பின் நிர்வாகிகள் 5 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் நடந்த தேர்தலில், இந்திய வம்சாவழியினரின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால் ஆளும் பாரிசான் தேசியக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது.
பாரிசான் தேசியக் கூட்டணியில் அங்கம் வகித்த மலேசிய இந்தியக் காங்கிரஸ், தான் போட்டியிட்ட 9 இடங்களில் மூன்றில் மட்டுமே வெற்றிபெற்றது.
மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, தான் கடந்த 30 ஆண்டுகளாக கைவசம் வைத்திருந்த அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.