பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கை விசாரிக்க புதிய விசாரணைக் குழு ஒன்றை அரசு விரைவில் அமைக்கவுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் அதிக சந்தேகத்திற்கு உரியவராக சிந்து மாகாணத்தின் முன்னாள் முதல்வர் அராப் குலாம் ரஹீம் உள்ளார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சிந்து மாகாணத் தலைவர் ஜூல்பிகார் அலி மிர்ஷா கூறுகையில், "பாகிஸ்தான் மக்கள் பெருவாரியான வெற்றிபெற்றுள்ள இந்த மாகாணத்தில் புதிய அரசு பதவியேற்றவுடன் விசாரணைக் குழு உருவாக்கப்படும்" என்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி அயல்நாட்டிலிருந்து பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் திரும்பியவுடன், அவரின் பேரணியில் நடந்த 2 தற்கொலைத் தாக்குதல்களில் 140 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.
இதில் உயிர் தப்பிய பெனாசிர் புட்டோ பின்னர் டிசம்பர் மாதம் ராவல்பிண்டியில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் மக்கள் கட்சி(க்யூ) தலைவர் அராப் குலாம் ரஹீம், "பெனாசிரின் இருப்பு நள்ளிரவுடன் முடிந்துவிடும்" என்று விடுத்த அறிக்கை அவரின் மீது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளதாக மிர்ஷா கூறினார்.