ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் பங்கேற்க வேண்டும் என்றால் திபெத் மக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி சீனாவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் சீனாவின் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கி உள்ளது. இதனிடையே திபெத் பகுதியில் சுதந்திர போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை சீனா அடக்கி வருவது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.
சீனாவின் மனித உரிமை மீறல் செயலை கண்டித்து ஒலிம்பிக் துவக்க விழாவை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் சர்கோசி சீனாவுக்கு நிபந்தனை விதித்துள்ளார்.
திபெத் மக்களின் பிரதிநிதியான தலாய் லாமாவோடு சீனா பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும் என்றும், திபெத் மக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சர்கோசி தெரிவித்திருப்பதாக பிரான்ஸ் அமைச்சர் ரமா யாடே கூறியுள்ளார்.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டால் மட்டுமே பிரான்ஸ் அதிபர் பெய்ஜிங் செல்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ஒலிம்பிக் ஜோதி நாளை பிரான்சின் பாரிஸ் நகரை வந்தடைய உள்ளது. இதனை முன்னிட்டு பிரான்ஸ் நகரம் முழுவதும் திபெத் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.