சிறிலங்காவின் கம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியாவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சிறிலங்காவின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் கம்பகா மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் கெக்டர் தர்மசிறியும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வெலிவேரியா நகரில் இன்று காலை 7.30 மணியளவில் சிங்களப் புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த போது ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மராத்தான் போட்டியை தொடங்கி வைப்பதற்காக வெலிவெரியாவில் உள்ள கந்தை விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது அங்கு நின்ற தற்கொலைப்படையினர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளேயை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார். மராத்தான் ஓட்டப் பந்தய வீரர் போன்று நின்ற ஒருவரே தாக்குதலை நடத்தியிருக்கின்றார்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மராத்தான் போட்டியை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் மராத்தான் வீரர்களுக்கு கை கொடுக்க ஆரம்பித்த போதே மராத்தான் ஓட்டப் பந்தய வீரர் போன்று நின்ற தற்கொலைப்படையினர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். நிகழ்விடத்திலேயே ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கம்பகா மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளரும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டதனை உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதலில் 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான காயங்களுக்குள்ளானோர் கம்பகா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதான உறுப்பினர்களில் ஒருவரான கொல்லப்பட்ட ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அரசாங்கத்தின் காய் நகர்த்தல்களுக்குரிய முக்கிய அமைச்சராகவும் திகழ்ந்தார்.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து சிறிலங்காவில் இரண்டு அமைச்சர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.