பிரபலமான இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை வருகிற ஏப்ரல் 15 முதல் ஒளிபரப்புவதை நிறுத்துமாறு தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஆஃப்கானிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் இஸ்லாமிற்கு எதிரான காட்சிகளும் கருத்துக்களும் ஏராளமாக உள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
ஆஃப்கன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்தில், இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களின் மீது ஏராளமான புகார்கள் வந்து குவிந்ததாகவும் அதன் பிறகே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆஃப்கன் பண்பாடு மற்றும் தகவல் அமைச்சகப் பேச்சாளர் பி.பி.சி. நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் ஒளிபரப்பாகும் 6 இந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் அந்நாட்டுத் தொலைக்காட்சிகளுக்கு ஏராளமான வருவாயைக் குவித்து வந்தன.
குறிப்பாக டோலோ, அரியானா, ஷாம்ஷாத் போன்ற தனியார் தொலைக்காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை பாஷ்ட்டோ மற்றும் பெர்ஷியன் மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகின்றன.
ஆனால், அவை இஸ்லாமிற்கு எதிரானவை என்று மதத் தலைவர்கள் குற்றம்சாற்றினர்.
2005 ஆம் ஆண்டு டோலோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "கியுன்கி சாஸ் கபி பாஹு தி" என்ற தொடர்தான் ஆஃப்கனில் முதன் முதலில் ஒளிபரப்பாகிய இந்தியத் தொலைக்காட்சித் தொடராகும்.
ஆபாச நடனம் உள்ளிட்ட இஸ்லாமிற்கு எதிரான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடை செய்வதற்கான தீர்மானம் ஆஃப்கன் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.