பாகிஸ்தானின் வடமேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று கடத்தல்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் பாதுகாப்பு தரப்பில் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
ஆஃப்கானிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக பாகிஸ்தானிற்குள் நுழைந்த கடத்தல்காரர்களை தல்பாந்தின் என்ற பகுதியில் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர் அவர்களைச் சரணடையுமாறு வலியுறுத்தினர்.
அதற்கு மறுத்த கடத்தல்காரர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் துவங்கினர். இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது.
இதில் பாதுகாப்புப் படையினர் ஒருவர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தும் ஆஃப்கன் கடத்தல்காரர்கள் வழக்கமாக பலுசிஸ்தான் வழியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.