குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களைக்கொண்டு மிகப்பெரிய நாசத்தை விளைவிக்கும் வகையில் அணு ஆயுதங்களைக் கைப்பற்றிப் பயன்படுத்த சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் காய்டா திட்டமிட்டு வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறை கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த போது, அல் காய்டா இயக்கத்தின் திட்டம் தெரியவந்ததாக அமெரிக்கப் புலனாய்வு மற்றும் ஆராய்ச்சித் துறையின் இணைச் செயலர் சார்லஸ் ஆலென் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி (9/11) அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது பயன்படுத்தியவாறு, தனது மற்ற தாக்குதல்களுக்கும் மிகக் குறைந்த அளவிலான ஆட்களை மட்டுமே பயன்படுத்த அல் காய்டா திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
"9/11 தாக்குதலிற்குப் பிறகு ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரின் வெற்றிகள், அல் காய்டாவின் அணு ஆயுதத் திட்டங்களின் மீது நாங்கள் கொண்டிருந்த பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அல் காய்டாவிற்கு உடனடியாகப் பயன்படுத்த மட்டுமே ஆயுதம் தேவை. பதுக்கி வைத்துப் பின்னர் பயன்படுத்துவதற்கு அல்ல" என்றார் ஆலென்.
"அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது 9.11.2001 அன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியதைப் போலவே, அமெரிக்காவின் மீது அணு ஆயுதத் தாக்குதலையும் நடத்த முடியும். அதற்கு அல் காய்டாவிற்கு மிகக் குறைவான திறமையான ஆட்களே போதும்" என்றும் அவர் கூறினார்.
"பயங்கரவாதிகளின் திட்டம் எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும், பயங்கரவாதிகள் அணு ஆயுதத்தை பெறுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவது அவசியம்.
பயங்கரவாதிகள் கதிர்வீச்சுத் தனிமங்களைக் கொண்டு தன்னிச்சையாக அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியாது. அதற்கு மிகப்பெரிய அடிப்படைக் கட்டமைப்புகள் தேவை. ஆனால், அணு ஆயுதங்களை வாங்கவும் திருடவும் பயங்கரவாதக் குழுக்களால் முடியும்.
அரசுகளின் உத்தரவாதங்களோ, திட்டங்களோ பயங்கரவாதக் குழுக்களுக்குத் தேவையில்லை. அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒருமுறை வரலாற்றைத் திருப்பவே விரும்புவார்கள்" என்ற ஆலன், "அதற்குள் அல் காய்டா இயக்கத்தின் முயற்சிகளைத் தடுத்தாக வேண்டும்" என்றார்.