இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆறுகளின் குறுக்கே இந்தியா கட்டவுள்ள அணைகளால் பாகிஸ்தானில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பக்லிஹார், கிஷான் கங்கா அணைகள் உள்பட 62 அணைகளைக் கட்டுவதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்து அவற்றில் சிலவற்றின் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கெளகாப் இக்பால் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜூலம், சேனாப் ஆகிய நதிகளில் சுமார் 80 விழுக்காடு நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்வதால் பாகிஸ்தானில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்" என்று கூறியுள்ளார்.
"இந்தியாவின் அணைத் திட்டங்கள் இண்டஸ் பாசன உடன்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. இவ்விடயத்தில் தனது தனிப்பட்ட நலன் கருதியும், அடிப்படைத் தேவைக்காகவும் உரிமைக் குரல் எழுப்ப ஒவ்வொரு குடிமகனிற்கும் சட்டப்படி உரிமை உள்ளது" என்றும் இக்பால் கூறியுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், இந்தியா அணைகளைக் கட்டுவதால் பாகிஸ்தானில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுமா என்பதை ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்நாட்டு அமைச்சரவைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.