ஈராக் தலைநகர் பாக்தாதின் வடக்குப் பகுதியில் இன்று இறுதி ஊர்வலம் ஒன்றில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சன்னி இனக் காவலரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுவதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது தற்கோலைத் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உயிரிந்த காவலர்களின் உறவினர்கள் ஆவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாக்தாதில் இருந்து வடக்கில் 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சைதியா என்ற நகரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கிடையில் பாஸ்ரா நகரத்திற்கு வடக்கில் நடந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 7 தீவிரவாதிகளை ஈராக்கியப் படைகள் சுட்டுக் கொன்றதாகவும், 18 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.