இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை தற்போதுள்ள அதிபர் ஜார்ஜ் புஷ் அரசின் கீழ் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்கான காலம் கடந்துகொண்டு இருக்கிறது என்றும் அமெரிக்கா மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளது.
வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் பேச்சாளர் டாம் கேசே, "இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் விரைவாக நிறைவேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதிபர் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு அதற்கான காலம் கடந்து கொண்டுள்ளது" என்றார்.
ஒருவேளை தற்போது முடியாவிட்டாலும் அமெரிக்காவில் புதிதாக அமையவுள்ள அரசு இந்த உடன்பாட்டைச் செயல்படுத்த முயலுமா என்று கேட்டதற்கு, "தற்போதுள்ள அரசின் விதிமுறைகள் பற்றி புதிய அரசு விவாதித்த பிறகே அதுபற்றிக் கூற முடியும்" என்றார்.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நிறைவேறினால் ஒட்டுமொத்த இந்திய- அமெரிக்க நல்லுறவில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட்ட கேசே, அந்த நல்ல மாற்றத்தை அடைய அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும், இவ்விடயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வரை காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது என்று இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூறியுள்ள நிலையில், டாம் கேசேவின் நெருக்கடி முக்கியத்துவம் பெறுகிறது.