வடக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தேவாலயம் அருகில் சிறிலங்க விமானப்படை விமானங்கள் இன்று குண்டுகளை வீசின.
இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க ராணுவத்திற்கும் இடையில் கடுமையான மோதல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், முகமலை பகுதியில் இன்று காலை சிறிலங்க விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் புலோபலை என்ற இடத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி மையம் முற்றாக அழிக்கப்பட்டதை விமானிகள் உறுதி செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில்தான் புகழ்பெற்ற மன்னார் தேவாலயம் உள்ளது. தாக்குதல் காரணமாக இந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர்.
தேவாலயத்தில் இருக்கும் அன்னையின் திருவுருவச் சிலையையும் ஆலயத்திலிருந்து வெளியேற்றி எடுத்துச் செல்ல மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை உத்தரவு பிறப்பித்தார்.
"வரலாற்றில் எமது சொந்த நாட்டுக்குள்ளேயே, முதல் முறையாக மடு அன்னை தனது ஆலயத்தை விட்டு அகதியாக வெளியேறிய நிகழ்வு நடந்துள்ளது" என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை கூறினார்.
1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது 36,000 அகதிகளுக்கு புகலிடமாக இந்த தேவாலயம் விளங்கியது.
இப்போது, அங்கே தங்கியிருந்த அகதிகள், பங்குத்தந்தை, பணியாளர்கள், துறவியர், கன்னியாஸ்திரியர்கள் என அனைவரும் வெளியேறி விட்டனர். அப்போது தங்களுடன் அன்னையின் திருவுருவச் சிலையையும் எடுத்துக்கொண்டு வெளியேறி உள்ளனர்.