வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள திபெத்தில் தற்போது நிலவும் சூழலைக் கண்காணிப்பதற்கு அயல்நாட்டுப் பார்வையாளர்களை சீனா உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி வலியுறுத்தியுள்ளார்.
திபெத் விவகாரத்தில் நல்லவிதமான முடிவினை எட்டுவதற்காக, திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுடன் சீனா பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
வாஷிங்டனில் நடந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், இந்தியாவில் தான் சுற்றுப்பயணம் செய்தபோது தலாய் லாமாவைச் சந்தித்தது தொடர்பாக பெலோசி கூறியதாவது:
தலாய் லாமாவின் புனிதத் தன்மைக்கு மதிப்பளித்து அவருடன் அமைதிக்கான தீர்வை நோக்கிப் பேச்சு நடத்த சீனா முன்வர வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
திபெத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய சுதந்திரமான அயல்நாட்டுக் கண்காணிப்பாளர்களை திபெத்திற்குள் உடனடியாக அனுமதிக்க சீனா முன்வர வேண்டும்.
தலாய் லாமாவைச் சந்தித்து அவருக்கு எங்களின் மரியாதை செலுத்தத் திட்டமிட்டோம். திபெத்தின் தன்னாட்சி கோரிக்கையின் அடிப்படையில் பேச்சு நடத்த வருமாறு சீன அரசிற்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் தலாய் லாமவுடன் நாங்களும் இணைந்துள்ளோம். இவ்வாறு பெலோசி கூறினார்.